மகா சிவராத்திரி விழாவை 04.03.2019 மற்றும் 05.03.2019 ஆகிய நாட்களில் ஈஷா நிறுவனம் நடத்த உள்ளது. இந்த விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் உயிர்களுக்கு வன உயிரினங்களால் ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கவும் உறுதி செய்யும்படி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுமக்கள் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க உறுதி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. இதன்படி கோவை மாவட்ட வன அலுவலகர் வெங்கடேஷ், ஈஷா யோகா மையத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
- ஈஷா நிறுவனம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி விழாவிற்கு வருகை தரும் வாகனங்கள் முள்ளங்காடு வனச்சோதனைச் சாவடி வழியாக செல்லும் வனச்சாலையில் செல்லக்கூடாது.
- மகாசிவராத்திரி விழாவிற்காக வானவேடிக்கை, பட்டாசு வெடித்தல் போன்ற நிகழ்வுகள் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.
- அதிக ஒளியை உமிழும் விளக்குகள் மற்றும் அதிக ஒலி மற்றும் இரைச்சலை ஏற்படுத்தும் ஒலி பெருக்கிகள் மற்றும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும்.
- மகாசிவராத்திரி விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள், ஈஷா நிறுவனத்தின் தொண்டர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு மிக அருகாமையிலுள்ள போலாம்பட்டி பிளாக் II ஒதுக்கு வனத்திற்குள் எக்காரங்களுக்காகவும் நுழையக்கூடாது.
- மகாசிவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் வனத்திற்குள் நெருப்பு பரவ வாய்ப்பு உள்ள எவ்வித காரியங்களிலும் ஈடுபடக்கூடாது.
- பாலித்தீன் பை, பொதுமக்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களின் மீதம் மற்றும் பிற குப்பைகள் விழா நடைபெறும் இடத்திலிருந்து வனத்திற்குள் வராமல் தடுக்கப்பட வேண்டும்.
- மகாசிவராத்திரி விழா நடைபெறவுள்ள பகுதிகளுக்கு மின் விளக்குகள் உரிய முறையில் அமைத்திட வேண்டும்.
- பார்வை மாடம் அமைத்து பணியாளர்களை அமர்த்தி யானைகளின் நடமாட்டங்களை கண்காணிக்க வேண்டும்.
- வன எல்லையை ஒட்டி தற்காலிக சோலார் மின்வேலி அமைக்கப்பட வேண்டும்.
- மகாசிவராத்திரி நடைபெறும் நாட்களில் வனத்திற்குள்ளோ வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலோ வன உயிரினங்களால் விழாவிற்கு வரும் பக்தர்களின் உயிருக்கோ, உடமைகளுக்கோ சேதம் ஏற்பட்டால் அதற்கு இத்துறை பொறுப்பு ஏற்கவோ, இழப்பீடு, நிவாரணம் வழங்க இயலாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.