நாமக்கல் அருகே, மகனின் மருத்துவப் படிப்புக்காக அதிக வட்டிக்கு கடன் மேல் கடன் வாங்கிய கூலித்தொழிலாளியிடம் கடன் கொடுத்தவர் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி, வீடியோவில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள எண்.: 3, குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் மணி (43). இவருடைய மனைவி மலர்க்கொடி (36). இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகன்; 18 வயதில் ஒரு மகள் உள்ளனர். மகன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மணி, தன் குடும்பத்தில் இருந்து மகனை முதல் தலைமுறை பட்டதாரியாக மட்டுமின்றி, முதல் தலைமுறை மருத்துவராக்கிவிட வேண்டும் என்று கருதினார்.
அதற்கேற்ப மகனும், பிளஸ் 2- வில் நல்ல மதிப்பெண் பெற்றதால், அரசு ஒதுக்கீட்டில் அண்ணாமலை பல்கலையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது. ஆனாலும் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் என ஆண்டுக்கு 5.50 லட்சம் ரூபாய் செலவாகும் என்றதால் அதிர்ச்சி அடைந்தார். எனினும், மகனை எப்படியும் மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த மணி பல இடங்களில் கடன் வாங்கினார்.
அப்பகுதியில் உள்ள வரலட்சுமி சேகோ ஆலையில் மூட்டைத் தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர், கடனை அடைக்க வேண்டும் என்பதால் விடுப்பே எடுக்காமல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், மல்லூரில் உள்ள சன் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவன அதிபர் பூபதி என்பவரிடம் இருந்து, அவர் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.
ஒரு கட்டத்தில், கடன் மற்றும் வட்டி சுமை கழுத்தை நெரிக்கவே, வட்டியைக்கூட திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறி வந்துள்ளார். வட்டி செலுத்த தாமதம் ஆனதால் அதற்கும் அபராத வட்டி போட்டுள்ளனர். பணத்தைக் கேட்டுச் சென்ற பூபதி பலர் முன்னிலையில் மணியை ஆபாசமாக பேசி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர், ஜூன் 24- ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து விட்டார்.
மயங்கிக் கிடந்த அவரை அந்த வழியாகச் சென்ற சிலர் மீட்டு, உடனடியாக மல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சுயநினைவு இல்லாத நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூச்சி மருந்து குடிப்பதற்கு முன்பாக அவர் காணொலிப்பதிவு மூலம் மரண வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தக் காணொலி பதிவு, சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் காணொலிப் பதிவில், என் பெயர் மணி. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா, அம்மா யாரும் இல்லை. என் பையனை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டேன். அதுக்காக அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கினேன். எப்படியாவது பையனை படிக்க வைக்கணும். கடன் கொடுத்தவங்க சுத்தி சுத்தி அடிக்கிறாங்க. கண்டபடி திட்டறாங்க. சன் பைனான்ஸ் பூபதியிடம் பணம் வாங்கினேன். ஆனா வட்டி கட்ட முடியல.
கடனை அடைக்க அவரிடமே திரும்ப திரும்ப கடன் வாங்கினேன். நீங்க அது என் பையன் படிப்புக்கு உதவினீங்க. எல்லாம் பரவால. ஆனா இவ்வளவு வட்டி ஆவாது. அப்புறம் கடன் வாங்கினவன் எல்லாம் என்ன மாதிரி மருந்து வாங்கி குடிச்சிட்டு சாவ வேண்டியதுதான். அதிகாரிகள் என் குடும்பத்தை கைவிட்டுடாதீங்க. அதிக கந்து வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை கண்ட்ரோல் பண்ணுங்க. ஒரு ரூபாய் வட்டி அல்லது ரெண்டு ரூபாய் வட்டினா பரவாயில்லை. இனனும் அஞ்சாரு நாள்தான் இருக்கும். கட்டினா கட்டு... இல்லைனா எதுனா பண்ணிடுவேன்னு மிரட்டுறாரு.
உன்னை விட்டுட்டு போறேன் சாமி... அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா உன்னை காப்பாத்துறேன். உன்னை விட்டால் குடும்பத்த காப்பாத்த ஆள் இல்ல. நீதான் முன்னுக்கு வரணும். அம்மாவையும், பாப்பாவையும் கைவிட்டுடாத சாமி. மலரு... உனக்கு எந்த ஒண்ணும் நான் செஞ்சதில்லை. நல்லபடியா இருந்து குடும்பத்த காப்பாத்து.
இன்னும் கொஞ்ச நாள் வாழத்தான் ஆசை. ஆனா எல்லாரும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்க. கடனுக்கு பயந்து செத்துப் போயிட்டான்னு நினைக்காதீங்க. என்னால இதுக்கு மேல சுமக்க முடியல. உங்ககிட்ட வாங்கின பணம் எல்லாதையும் என் பையன் கட்டிடுவான். அவனை இன்னும் ஒரு வருஷம் படிக்க விடுங்க. என் சாவுக்கு சன் பைனான்ஸ் பூபதிதான் காரணம். உனக்கும் குடும்பம், குட்டி இருக்குது. நினைச்சுப பாத்து குடும்பத்த வாழ விடு. அக்கம்பக்கத்துல உள்ளவங்க சாடை பேசி என் குடும்பத்த சாவடிச்சீடாதீங்க.
ரெண்டு மூணு நாளாக நெஞ்சு வலி ஓவராயிடுச்சு. மாத்திரை போட்டுக்கிட்டு வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன். வரலட்சுமி மில் முதலாளியும் பையன் படிப்புக்கு ரெண்டு வருஷமாக உதவி செஞ்சாரு. ஒருகட்டத்துல அவரும் கைவிட்டுட்டாரு. பூபதிக்கிட்ட சொல்றது ஒண்ணே ஒணணுதான். இவ்வளவு வட்டி ஆகாது. ஏற்கனவே உன்னால ஒருத்தன் தூக்குப்போட்டு செத்துப்போய்ட்டான். உன்னிடம் கையை நீட்டி பணம் வாங்கினது உண்மைதான். நான் யார் யாரிடம் கடன் வங்கினேன் என்ற விவரம்லாம்கூட என் பொண்டாட்டிக்கு தெரியாது. பணத்தை செட்டில் பண்ணுடானு ஆபாச வார்த்தைகளால பூபதி திட்டினதோட, வீட்டை ஜப்தி பண்ணிடுவேனு மிரட்டினான்.
அக்கம்பக்கத்துல கேவலமாக பேசுவதால் நீ எதுவும் தப்பான முடிவு எடுத்துடாத. நீ உயிரோட இருக்கணும். அப்பதான் என் ஆத்மா சாந்தி அடையும். என்னால ஒண்ணும் முடியல... நான் செத்தாலும் ஒரு அடையாளம் வேணும். பைனான்ஸ்ல இவ்வளவு வட்டி வேணாம். நான் முடிச்சிக்கிறேன். அம்மாவையும் பாப்பாவையும் கைவிட்டுடாத,'' என்று கண்ணீர் மல்க, உருக்கமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, மணியின் மனைவி மலர், மகன், மகள் ஆகியோரை சந்தித்து கேட்டபோது, ''படிப்புக்காக கடன் வாங்கித்தான் செலவு செய்கிறார் என்பது தெரியும். ஆனால் அவர் யார் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்ற விவரங்களை இதுவரை எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. அதேபோல கடன் கொடுத்தவர்கள் யாருமே இதுவரை எங்க வீட்டுப்பக்கம் வந்ததில்லை. அந்தளவுக்குதான் அவரும் நடந்து கொண்டார். இப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டார்,'' என்றனர்.
இதற்கிடையே, ஜூன் 26- ஆம் தேதி மாலை, சன் பைனான்ஸ் அதிபர் பூபதியை வெண்ணந்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது அதிக வட்டி வசூலித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பூபதி, பின்னர் திருச்செங்கோடு கிளைச்சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து வெண்ணந்தூர் காவல்துறை எஸ்.ஐ., மணிமாறனிடம் கேட்டபோது, ''எங்களது விசாரணையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மணி, பூபதியிடம் 2.50 ரூபாய் வட்டிக்கு 6 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருக்கிறார். அவர் ஒரு மீடியேட்டர் போல முன்னின்று 21 பேருக்கு பூபதியிடம் கடன் வாங்கியும் கொடுத்திருக்கிறார். அதிக வட்டி வசூலித்ததாக பூபதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறோம்,'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.