பத்திரப் பதிவின்போது மோசடி செய்து, நிலத்தை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த, பெரம்பலூர் மாவட்ட சார்பதிவாளர், எழுத்தர் உள்ளிட்ட ஐந்து பேரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர், 80 வயது சின்னசாமி. இவருக்கு சுமார் இரண்டரை ஏக்கர் பட்டா நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை அவரது மகன்கள் செல்வம் சுந்தரராஜ் ஆகிய இருவருக்கும்தான் செட்டில்மெண்ட் மூலம் எழுதி பத்திரம் பதிவு செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி 2015ம் ஆண்டு வாலிகண்டபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவும் செய்யப்பட்டது.
ஆனால் பத்திரம் எழுதிய எழுத்தர், சுந்தர்ராஜனுக்கு உரிய பங்கு நிலத்தையும் அவரது அண்ணன் செல்வம் பெயருக்கே பத்திரப்பதிவு செய்துவிட்டனர். சுந்தர்ராஜன் தன் பெயருக்கும் பாதி நிலம் எழுதப்பட்டுள்ளது என்று நம்பிக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் செல்வம் 2019 ஆம் ஆண்டு சுந்தரராஜனுக்கு தெரியாமல் தன் பெயருக்கு ஏமாற்றி எழுதி வாங்கப்பட்ட முழு நிலத்தையும் வேறு இருநபர்களுக்கு விற்றுவிட்டார்.
சில மாதங்களுக்கு பிறகு தன்னை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கி அதை மற்றவர்களுக்கு செல்வம் விற்றுள்ளது, சுந்தர்ராஜனுக்கு தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தர்ராஜன், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
செல்வம் கொடுத்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு காவலர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் மோசடியில் ஈடுபட்ட பத்திர எழுத்தர்கள் செந்தில்குமார், துரைசாமி, நடராஜன், அப்போதைய சார் பதிவாளர் அருள்ஜோதி ஆகிய 5 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்யத் தேடி வருகின்றனர்
மோசடி வழக்கில் சிக்கியுள்ள சார்பதிவாளர் அருள்ஜோதி, தற்போது பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளராக பணி செய்து வருகிறார் என்று கூறுகின்றனர். மோசடி நில விற்பனைக்கு உடந்தையாக இருந்த பதிவாளர் எழுத்தர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.