சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவர் சந்தையை தமிழக வேளாண்மை மற்றும் ஊரக நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலர்களுடன் உழவர் சந்தையில் சிதம்பரம் மேல வீதியில் இடநெருக்கடியால் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து சிதம்பரம் நகரின் நீர் ஆதாரமாக விளங்கும் வக்கராமரி ஏரியை ஆய்வு செய்தார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “வக்கராமாரி ஏரியில் இருந்து சிதம்பரம் நகருக்கு குடிநீர் எடுத்து செல்ல முடியாமல் இயந்திரங்கள் பழுதாகி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தமிழக முதல்வர் ஆணையின் பேரில் தமிழக மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் வக்கராமாரி ஏரியில் இருந்து சிதம்பரத்திற்கு குடிநீர் எடுத்து செல்லும் வகையில் ரூ. 5 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ரூ. 328 கோடி தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவர் சந்தையில் நவீன காய்கறி மார்க்கெட் அமைப்பதற்காக 5 கோடியே 70 லட்சம் செலவில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகள் இந்த ஏரியில் விடப்படுகிறது. இதனை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தனியாக முதலைப்பண்ணை ஒன்று அமைத்து அதில் முதலைகளை பாதுகாக்கப்படும். இது விரைவில் நடைபெறும்” என்றார்.
இவருடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கோட்டாட்சியர் ரவி, நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீனா, நகர்மன்ற தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட வருவாய் மற்றும் காவல்துறையினர், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.