![Namakkal district collector shreya](http://image.nakkheeran.in/cdn/farfuture/YpIxu7cjb9AkWWrjrZkTqb2viHCP3QLgkZ8gXHxMv-k/1623927690/sites/default/files/inline-images/th_1092.jpg)
தமிழகம் முழுக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்ற வார இறுதியில் பணி இட மாறுதல் செய்யப்பட்டனர். பல மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வரிசையில் நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பெண் அதிகாரியான திருமதி ஸ்ரேயா பி.சிங் நியமிக்கப்பட்டார்.
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், பொறியியல் பட்டதாரி. 2012ம் ஆண்டு இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்)க்கு தேர்வானார். ஆனாலும் அவரது கனவு மற்றும் இலட்சியமாக இருந்த ஐ.ஏ.எஸ். படிப்பை தொடர்ந்து மேற்கொண்டார். அதன்விளைவாக கடந்த 2013 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்றார். அதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையான குமரி மாவட்டத்தில், அதே ஆண்டு பயிற்சி கலெக்டராக இருந்தார். அதன் பிறகு பத்மநாதபுரம் சார் ஆட்சியராக பணி புரிந்தார். அங்கிருந்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்தார். தற்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியராக 17ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
புதிய ஆட்சியரான திருமதி ஸ்ரேயா கூறும் போது, "தற்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரே போராட்டம், கரோனா வைரஸ் பரவலை ஒழிப்பது தான். மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். தமிழக அரசும், முதல்வர் அவர்களும், கரோனாவை முழுமையாக நம் நாட்டிலிருந்தே அப்புறப்படுத்த அனைத்து நிலைகளிலும் தங்களது உழைப்பை செலுத்திவருகின்றனர். நாமக்கல் மாவட்டம் விரைவில் கரோனா இல்லாத மாவட்டமாக உருவாக நான் உட்பட மாவட்ட நிர்வாகம் தொடர் உழைப்பை செலுத்தும்" என்றார்.
ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்-ன் கணவர் ஜோபி. இவர் பிரபல தனியார் மலையாள செய்தி நிறுவனத்தில், விளையாட்டு செய்தி பிரிவில் சீனியர் எடிட்டராக பணியாற்றுகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.