ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர். இதனிடையே நாளை 9ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.