நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்பட கலைஞர் அஜித்குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைபள்ளி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தற்போது அங்குள்ள சூழல் குறித்து கடந்த 19-ம் தேதி செய்தி சேகரிக்க சென்றனர். அவர்கள் இருவரும் செய்தி சேகரித்து விட்டு வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அவர்களை பின்தொடா்ந்து 5 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்கள் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி வாகனத்தின் கண்ணாடியை உடைத்து செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் புகைப்பட கலைஞர் அஜித்குமார் இருவரையும் தாக்கினார்கள்.
இதை கண்டித்து தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த பத்திரிகையாளர் தாகூர் தலைமை வகித்தார். மூத்த செய்தியாளர்கள் பரமேஸ்வரன் மற்றும் சுவாமிநாதன் கண்டன உரையாற்றினார்கள்.
அவர்கள் பேசும் போது, “நக்கீரன், தமிழ் பத்திரிகை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் வார இதழ். சமூகத்தில் உள்ள எத்தனையோ குறையோடு கிடக்கிற அவலங்களை, அழுக்குகளை புலனாய்வு மூலம் நக்கீரன் வெளி கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று தான் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தின் உண்மை சம்பவங்களை புலனாய்வு மூலம் வெளி கொண்டு வருகிறது.
ஆர்ப்பாட்டம் போராட்டம் என்றால் அடுத்த நாள் தினசரி செய்தி தாளில் வரும். புலனாய்வு இதழ் என்பது ஸ்கூப் செய்தி என்று சொல்வார்கள். அந்த மாதிரி செய்திகளை தான் தேடுவார்கள். காவல்துறையில் எப்படி உளவுத்துறை இருக்கிறது அந்த உளவுத்துறைக்கு தீனி போடக்கூடிய செய்திகளை தருவது தான் புலனாய்வு இதழின் செய்தியாளா்கள். அதனால் தான் எக்ஸ்க்ளுசீவ் செய்தியான தனித்துவமான செய்திகளை எடுப்பது தான் அவர்களின் பணி.
அப்படி தான் கனியாமூர் பகுதிக்கு சென்று அங்கு தற்போதுள்ள தனித்துவமான செய்தியை நக்கீரன் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்பட கலைஞர் அஜித்குமார் எடுத்து விட்டு வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டாலும் மீதியுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும். அதே நேரத்தில் கைது மட்டும் போதுமான நடவடிக்கையாக இருந்து விட முடியுமா?
10 நாட்கள் ரிமாண்ட் செய்வார்கள். அதன்பிறகு வெளி வந்து இன்னும் ஒரு பத்திரிகையாளரை தாக்கலாம் என்ற அசட்டு தைரியத்தை தந்து விடாதா? தமிழக காவல்துறை அதற்கு அனுமதித்து விடலாமா? எனவே கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்” என்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் பிரஸ் கிளப் தலைவர் மதன்குமார், செயலாளர் மணிகண்டன் உட்பட அனைத்து செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், தொலைக்காட்சி காமிராமேன்கள் கலந்து கொண்டனர்.