நக்கீரனில் 2018 ஏப்ரலில் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக வெளியாகிய செய்திகள் தொடர்பாக கவர்னர் மாளிகையிலிருந்து நக்கீரன் மீது புகார் அளிக்கப்பட்டு நக்கீரன் ஆசிரியர் உள்பட 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் அந்த வழக்கில் நக்கீரன் ஊழியர்கள் 30 பேர் நீக்கப்பட்டு நக்கீரன் ஆசிரியர் மற்றும் 4 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்திலிருந்து ஜூன் 10ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தங்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று நக்கீரன் ஆசிரியர் உள்பட 5 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு தடை விதித்ததோடு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நக்கீரன் சார்பாக வழக்கறிஞர் பி.டி.பெருமாள், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.