கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், முடிவுற்ற கட்டடங்களை திறந்து வைத்தும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
செருப்பு அணியக்கூடாது, குடை பிடிக்கக் கூடாது, மீசை வைக்கக் கூடாது, ஆபரணங்கள் அணியக்கூடாது, பெண்கள் மாா்பை மறைக்கக் கூடாது என சனாதனத்தின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உாிமை போராட்டங்களுக்கு வித்திட்ட தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நாகா்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகக் கட்டடத்திற்கு கலைவாணர் பெயர் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள எட்டரை அடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கலைஞர் சிலையை சிறப்பாக வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு தங்க மோதிரம் மற்றும் சால்வை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.