தமிழ்நாட்டில் உள்ள மணல் குத்தகைதாரர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருந்தனர். தொடர்ந்து மணல் குவாரிகளிலும் அரசு அனுமதித்த அளவை விட பல நூறு மடங்கு மணல் கூடுதலாக கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி அளவீடு செய்து, மணல் குவாரிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கட்டுமானத்திற்கு மணல் கிடைக்காமல் தடுமாறும் கட்டட உரிமையாளர்களை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு திருட்டு மணல் விற்பனை நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பிவயல் கிராமத்தில் மணல் எடுக்க அரசு திட்டமிட்டு அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை கரிகாலன் தரப்பினர் செய்து முடித்துள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிரடி சோதனையையடுத்து குவாரிகள் மூடப்பட்டதால், புதிதாக குரும்பிவயல் மணல் குவாரி திறக்கவும் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் அந்தப் பகுதியில் இருந்து மணல் கடத்தல்கள் நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து. வியாழக்கிழமை இரவு சோதனைக்கு சென்றபோது கருக்காக்குறிச்சி வடதெரு சின்னத்தம்பி மகன் பிரசாத்துக்கு சொந்தமான டிப்பர் லாரியில் மணல் ஏற்றி வந்த போது, தனிப்படை போலீசார் லாரியை நிறுத்தியதும் லாரி ஓட்டுநர் கணியான் கொள்ளை சுப்பன் மகன் சுந்தராசு லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
ஆற்று மணலுடன் நின்ற லாரியை மீட்டு வந்த தனிப்படை போலீசார் வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல இரவு நேரங்களில் ஏராளமாக மணல் கடத்தல்கள் நடப்பதாக அந்தப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர் .