''அகரம் கிராமத்தில் தடுப்பணை கட்டுவதற்கு பதிலாக ஆதிச்சநல்லூரில் புதியதாக தடுப்பணை கட்டுவது தான் மிகவும் பலன் அளித்திடும்'' எனவே, அகரம் கிராமத்தில் கட்டப்பட இருக்கும் புதிய தடுப்பணை ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குபதிலாக ஆதிச்ச நல்லூரில் தடுப்பணை கட்டிடவேண்டும்." எனவும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என வலியுறுத்தியுள்ளது தி.மு.க. மாநில இளைஞர் அணியினை சேர்ந்த வழக்கறிஞர் ஜோயலின் அறிக்கை.
செய்தி அறிக்கையிலிருந்து., " தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மூலமாக 46ஆயிரத்து 107ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய நீராதாரமான தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை தமிழ்நாடு குடிநீர் வழங்கல்-வடிகால் வாரியத்தினரும், பொதுப்பணித் துறையினரும் போட்டி போட்டுக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக விற்பனை செய்துவருவதால் தாமிரபரணி பாசனத்தில் முப்போக நெற்பயிர் சாகுபடி ஒருபோகமாக மாறிவிட்டது. மேலும், மாவட்டத்தில் கோடைகாலங்களில் குடிநீருக்கு கடும்தட்டுப்பாடு ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது. தாமிபரணி ஆற்றில் மழைக்காலங்களில் அதிகப்படியாக வருகிற தண்ணீரை சேமித்து வைப்பதற்கு ஏதுவாக நமது மாவட்டத்தில் போதுமான அளவில் தடுப்பணைகள் இல்லை. இதனால், தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்து வருவதுடன், நிலத்திற்கு அடியில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடிநீரானது மக்கள் பயன்படுத்த முடியாதபடி உவர்ப்பு நீராகவும் மாறிவருவது வேதனைக்குரியதாகும்.
கடந்த 2011ம்ஆண்டு வல்லநாடு அகரம் அருகேயுள்ள பக்கவெட்டி கிராமப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை பயன்பாட்டில் இருந்துவரும் நிலையில், தற்போது வல்லநாடு அகரம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 13கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதியதாக தடுப்பணை கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளி பெறுவதற்கான ஆயத்தப்பணிகள் அரசால் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுமார் ஒருகிலோமீட்டர் தூரத்திற்குள் பக்கவெட்டியில் தடுப்பணை உள்ள நிலையில் வல்லநாடு அகரம் கிராமத்தில் அவசியமற்ற வகையில் புதியதாக தடுப்பணை கட்டுவது தேவையில்லாதது என்று விவசாயிகள் எண்ணுகின்றனர். ஆதலால் இந்த தடுப்பணை கட்டும் திட்டத்தினை மாற்றி அமைத்திடவேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நாங்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் வலியுறுத்திள்ளோம். தாமிரபரணி பாசன விவசாயிகள் நலன்கருதி திமுக இளைஞரணி சார்பில் ஏற்கனவே பசுமை தீர்ப்பாயத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டு அதன்மூலமாக பெறப்பட்ட உத்தரவால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் தூர் வாரும் பணிகள் ஒரளவிற்கு நடந்து முடிந்துள்ளது. இப்பணிகளால், ஸ்ரீவைகுண்டம் அணையில் ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் குறைந்தது 10முதல் 15டி.எம்.சி. தண்ணீரை தேக்கிவைத்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
பலவருட காலம் தொடர்ந்து போராடியதால், ஒரளவிற்கு தூர் வாரப்பட்டுள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் மீண்டும் மணல் மற்றும் கழிவுகள் சேர்ந்திடாமல் தடுத்திட ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மணலை வடிகட்டும் வகையில் நவீன முறையிலான தடுப்பணை கட்டவேண்டியது மிகவும் அவசியமாகும். இதுகுறித்து கடந்த இரண்டுவருடங்களுக்கு முன்பே நாங்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளநிலையில் ''அகரம் கிராமத்தில் தடுப்பணை கட்டுவதற்கு பதிலாக ஆதிச்சநல்லூரில் புதியதாக தடுப்பணை கட்டுவது தான் மிகவும் பலன் அளித்திடும்'' என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணமாகும். இந்நிலையில், விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு தேவையில்லாமல் அகரத்தில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு முயற்சிப்பது பெரும் அதிருப்தி அளிக்கிறது. எனவே, அகரம் கிராமத்தில் கட்டப்பட இருக்கும் புதிய தடுப்பணை ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குபதிலாக ஆதிச்சநல்லூரில் தடுப்பணை கட்டிடவேண்டும். அல்லது ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ்பகுதிகளான ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, வாழவல்லான் போன்ற ஏதாவது ஒருபகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன் அளித்திடும் வகையில் தடுப்பணை கட்டிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இல்லாதபட்சத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திடுவோம்."என்கிறது அந்த செய்தி அறிக்கை.