கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் இருந்து எஸ்.எஸ்.ஐ வில்சனை ஜனவரி 8- ஆம் தேதி மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்த கேரளா, தமிழ்நாடு போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக ஷமீம், தவுபீக் ஆகிய இருவரையும் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் தமிழக போலீசாரிடம், கர்நாடக போலீசார் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அருள்முருகன் முன்னிலையில் இருவரும் இன்று (20.01.2020) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது காவல்துறையினர் இரண்டு பேரையும் 28 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் அனுமதி கோரியிருந்தனர். அதைத் தொடர்ந்து போலீஸ் மனு மீது நாளை (21.01.2020) பிற்பகல் 03.00 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தனர்.
இதனிடையே எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் முகமது இஸ்மாயில், செய்யது ராஜா, அல்ஹபிப், முகமது ஷக்காரியா, ஹரிம் நவாஸ் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.