சிதம்பரம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தற்போது கடலூர் மற்றும் மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் வகையில் ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், இந்தப் பேருந்து நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போதைய மக்கள் தொகை, வாகன வசதிக்கு ஏற்றார் போல் இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இருந்து வருகிறது. இதனையொட்டி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், நகராட்சி ஆணையர் அஜித்தா பர்வீன் உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் இந்தப் பேருந்து நிலையத்தை கூடுதல் இடவசதியுடன் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக மாற்றுவது குறித்து ஆலோசனை செய்தனர். இவர்களுடன் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், சிதம்பரம் நகராட்சி பொறியாளர் மகாராஜன், மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், வெங்கடேசன், அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், திமுக நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.