நாகப்பட்டினம் பகுதியில் பல நாட்களாக ஆடு திருடி டிமிக்கி கொடுத்துவந்த திருடனைப் பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ஆடு திருடுபோவது வாடிக்கையாக இருந்துவருகிறது. அதேபோல பிரதாபராமபுரம், கவுண்டர்புரம் பகுதியிலும் இரவு நேரங்களில் அதிக ஆடுகள் திருடு போவதாக மக்கள் குமுறிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியில் கல்லறை அருகே சந்தேகப்படும்படியான சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், “யாரப்பா நீங்க, இந்த நேரத்துல இங்க என்ன செய்யுறீங்க” என விசாரித்தனர். அப்போது போதையின் உச்சத்தில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். பேச்சுவாக்கில் ஆடு திருடியதையும் உளறிக் கொட்டினர். கிராம மக்கள் ஆத்திரமடைவதைக் கண்டு சுதாரித்துக்கொண்ட மூவரில் இரண்டுபேர் ஓட்டம் பிடிக்க, ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
தொடர்ந்து கீழையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டதில், அந்த நபர் வேளாங்கண்ணி பூக்காரர் தெருவைச் சேர்ந்த ராஜ் சின்னத்தம்பி என்பது தெரியவந்துள்ளது. கசாப்புக்கடைக்கு ஆடுகளைத் திருடி விற்றதும் தெரியவந்துள்ளது.