நாகை அடுத்துள்ள அழிஞ்சைமங்கலத்தில் செயல்பட்டுவந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்கவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் ஜனவரி மாதம் துவங்கியதும் சம்பா, தாளடி சாகுபடி முடிந்து பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் நடந்துவருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய அரசு கொள்முதல் நிலையங்கள் இதுவரை பெரும்பாலான இடங்களில் திறக்கப்படாததால் விவசாயிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை அடுத்துள்ள அழிஞ்சைமங்கலம் கிராமத்தில் இயங்கிவந்த நேரடி நெல்கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படாமல் விவசாயிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அறுவடை முடிந்து பத்து நாட்களாகியும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட காரணத்தால் நெல்லை தேக்கி வைப்பதற்கு இடமில்லாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கொள்முதல் நிலையங்கள் விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என உறுதி அளித்தனர்.