தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் நாகையில் அரசின் முழு ஊரடங்கு உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டு இறைச்சி மற்றும் மீன்கள் வாங்க மக்கள் அதிகமாக குவிந்தனர்.
நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடைகள் அனைத்தும் இன்று முழுமையாக அடைக்கப்பட்டுள்ள நிலையில், நாகை அண்ணாசாலை, மார்க்கெட் பகுதியில் அமோகமாக இறைச்சி மற்றும் மீன் வகைகள் விற்கபட்டன. அதனை வாங்க பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் கூட்ட நெரிசலோடு திணறியது நாகை.
''கரோனா தொற்று தற்போது வேகமெடுத்து இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தநிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கட்டாய ஊரடங்கு விதித்திருக்கிறது அரசு. அதனை பொதுமக்களும் வணிகர்களும் ஒருசேர கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் இதுபோல் நடப்பது பெருத்த வேதனை அளிக்கிறது" என்கிறார்கள் காவல்துறையினர்.