Skip to main content

சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு! 

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

NAGAI DISTRICT TEMPLE FESTIVAL INCIDENT PEOPLES

 

சித்திரை தேர் திருவிழாவின் போது, சப்பரத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

 

நாகை மாவட்டம், திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த உத்திராபதீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருவடைத்தான் சப்பரத் தேரோட்டம் நேற்று (29/04/2022) இரவு நடைபெற்றது. 70 அடி கொண்ட சப்பரத்தை ஊர் மக்கள் இழுத்துச் சென்றனர். அவ்வப்போது, சப்பரத்தை நிறுத்த, அதன் சக்கரங்களுக்கு அடியில் முட்டுக்கட்டைப் போட வேண்டும். அந்த பணியில் 30 வயதான தீபன்ராஜ் ஈடுபட்டிருந்தார். 

 

சப்பரத்தை அவர் நிறுத்த முயன்ற தருணத்தில் பக்தர்கள் சப்பரத்தை வேகமாக இழுத்ததால் முட்டுக்கட்டைப் போட முயன்ற தீபன்ராஜ் மீது சப்பரத்தில் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவருக்கு முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் வைத்து மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி தீபன்ராஜ் உயிரிழந்தார். 

 

தஞ்சையில், உயர்மின் அழுத்த கம்பியில் சப்பரம் உரசியதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை சப்பரத் தேரோட்டத்தை போது மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் வேறு விதமாக உயிர் பலி ஏற்பட்டிருப்பது, அப்பகுதி மக்களைக் கலக்கமடையச் செய்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்