Skip to main content

 நாகை மீனவர்கள் மீது தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

Published on 08/08/2024 | Edited on 08/08/2024
 Nagai district fisherman Anbazagan incident

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறையில் இருந்து மீனவர்கள் வழக்கம் போல் விசைப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பேர் பைபர் படகுகளில் வந்துள்ளனர். அச்சமயத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த குமார், சாணக்கியன், அன்பழகன், பாக்கியராஜ், நாகராஜ் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களின் படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் என பல்வேறு பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர் அன்பழகன் தற்போது வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்