தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையிலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றபடவில்லை என்கிறார்கள் சமுக ஆர்வளர்கள்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. குறிப்பாக அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கவும், கட்சிக்கொடிகளை அகற்றவும், தலைவர்களின் சிலைகளை மூடி வைக்கவும், எம்.எல்.ஏ.அலுவலகங்களை மூடி சீல்வைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதி அமலுக்கு வந்ததும் திருவாரூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் காவல்துறையினர் இருந்தபோது அதிமுக காரில் வந்த பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டுள்ளார் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார். தேர்தலை முன்னிட்டு பணிமாறுதல் செய்யப்பட்ட உயர்மட்ட மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் இன்னும் பணியில் சேராத நிலையில், மூன்று நாட்கள் ஆகியும் நாகையில் பல்வேறு இடங்களில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அகற்றபடாமல் உள்ளது. நாகை நகர்புறம் மட்டுமில்லாமல், பழைய பேருந்து நிலையம், கோட்டைவாசல்படி, புத்தூர், மயிலாடுதுறை, சீர்காழி, என பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமலும், அரசியல் கட்சியினரின் கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றபடாமலும் உள்ளது.
இதுகுறித்து சமுக ஆர்வளர்கள் கூறுகையில்," தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலட்சியமாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் இருக்ககூடாது, உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பரங்களை அகற்றப்படவேண்டும். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை தேர்தல் விதிமீறல்கள் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தவேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் இதுவரை அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் பர்சனல் உதவியாளரை போலவே இருந்துவருகிறார். தேர்தல் சமயத்திலாவது ஒரு மாவட்ட ஆட்சியரை போல் தன்னிச்சையாக, துணிச்சலோடு, நேர்மையோடு செயல்பட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும். அதை விட்டு விட்டு மாவட்ட அதிமுக செயலாளரை போல் செயல்பட்டால் அவர்மீது வழக்கு தொடருவோம். ஆகவே உடனே விளம்பரங்களை அகற்றப்பட வேண்டும்." என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.