
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகாவீரர் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியத் துணைக் கண்டத்தில் நிலைபெற்றுள்ள பழம்பெரும் சமயங்களில் ஒன்று ஜைனம் என்னும் சமண சமயம். சமண சமயத்தின் 24ஆவது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பிறந்த நன்னாளில் அவர்களுடைய கொள்கைகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் சமண சமய மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைக் கூறி மகிழ்கிறேன்.
அரச குடும்பத்தில் பிறந்தவர் மகாவீரர். ஆயினும் அரச குடும்பச் செல்வச் செழிப்பை வெறுத்தவர். ஏழை, எளியோரின் வாழ்க்கைச் சூழ்நிலைகளை உணர்ந்து அவர்கள் மேம்பாட்டிற்காகச் சிந்தித்தவர். உண்மை,அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம், கொல்லாமை முதலான உயரிய உலகுக்குப் போதித்தவர். அறச்சிந்தனைகளை விதைத்து வளர்த்த வர்த்தமான மகாவீரர் பிறந்த நாளைத் தமிழ்நாட்டில் வாழும் சமண சமய மக்கள் சிறப்பாகக் கொண்டாடி மகிழும் வகையில் மகாவீரர் ஜெயந்தி திருநாளுக்குக் கலைஞர் தமிழ்நாடு அரசு சார்பில் முதன்முதலில் அரசு விடுமுறை வழங்கினார்.
சமண சமயச் சான்றோர்கள் தமிழ்மொழியில் பல்வேறு இலக்கிய, இலக்கண நூல்களை இயற்றி தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அதன் செழுமைக்கும் சிறந்த முறையில் பங்களித்துள்ளார்கள் என்பது பெருமைக்குரிய செய்தி. உயிர்களிடத்து அன்பு செலுத்தி, இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும் என்னும் மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிறுத்தி மகாவீரர் ஜெயந்தியினைக் கொண்டாடும் சமண சமய மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் கூறி மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.