![n](http://image.nakkheeran.in/cdn/farfuture/jJpA0qnR68DmFsV6J9ZJuU3GmKSypoz-9JsYmOLyGP8/1545043718/sites/default/files/inline-images/nel%202.jpg)
சுடுகாட்டுக்கு செல்ல பாதையில்லாத காரணத்தால் இறந்தவரின் சடலத்தை நெல் விளையும் வயல் வழியாக தூக்கி சென்ற அவலம் தொடர்கதையாகிவிட்டது. சடலத்தை சுமந்துசெல்ல பாதைகேட்டு 50 ஆண்டுகளாக அரசிடம் போராடுகிறோம் என கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்
.
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பனங்குடி. அங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான மயானதுறையானது காரைமேடு என்ற பகுதியில் ஊருக்கு ஒதுக்குப் புறமான வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இதனால் ஊரில் யாரேனும் உயிரிழந்தால் 2 கிலோமீட்டர் தூரம் வயலில் தூக்கி சென்று அடக்கம் செய்யும் நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது.
![n](http://image.nakkheeran.in/cdn/farfuture/iz_JqyjEXP_Hf0TXRoO0HHbiHj1BVEh06kdbZEmaK5k/1545043778/sites/default/files/inline-images/nel%201.jpg)
இந்நிலையில் இன்று அப்பகுதியை சேர்ந்த 120 வயதுடைய ராமசாமி என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால் அவரது உடலை விவசாயிகள் அரும்பாடுபட்டு வளர்த்த சம்பா பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.
பல ஆண்டுகளாக இந்த துயரத்தை சந்தித்து வருவதாக வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் ஒவ்வொரு முறையும் வயலில் தூக்கி சென்று பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் நாசமாவதாக வேதனையோடு கூறியுள்ளனர். மேலும், மழை காலங்களில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்படுவதாகவும், சில நேரங்களில் சடலம் தண்ணீரிலேயே தவறி விழுந்துவிடுவதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.
![n](http://image.nakkheeran.in/cdn/farfuture/atbVXFXsSfo-kvjl25sXxSO2tcOKthVFSKBN3z7GLPE/1545043842/sites/default/files/inline-images/nel3.jpg)
பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல்ளால் பல சிரமங்களை தாண்டிதான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக கண்ணீர்வடிக்கும் அப்பகுதியினர், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். எனவே உடனடியாக மயானத்துக்கு செல்வதற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் எனவும், இல்லையென்றால் சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
வளர்ச்சி பாதையில் இந்தியா செல்கிறது என அரசுகள் கூறி வந்தாலும், சுடுகாட்டிற்கு செல்லகூட பாதையில்லாத பல்வேறு கிராமங்கள் இருக்கிறது என்பது வேதனை.