தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று மதியம் ஒரு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்துச் சென்றனர். அதே போல பேராவூரணி டிப்போவிலிருந்து சென்ற 4 பேருந்துகளும் பட்டுக்கோட்டை டிப்போவைச் சேர்ந்த 3 பஸ்கள், புதுக்கோட்டை டெப்போவைச் சேர்ந்த 2 பஸ்கள் என சில மணி நேரத்தில் 2 குழுவாக 2 பைக்குகளில் சென்ற 4 பேர் 9 பஸ்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதில் சில பஸ் ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
திடீரென சில மணி நேரத்திற்குள் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் பொதுமக்கள் பதறும் விதமாக பஸ் கண்ணாடிகள் உடைத்த சம்பவம் போலிசாரை திணறடித்ததோடு பொதுமக்களை அச்சப்பட வைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தேடி வருகின்றனர். பைக் முன்னாள் பெட்ரோல் டேங்கில் சாக்கு மூட்டையில் கற்களை அள்ளிக் கொண்டு இருவர் வேகமாக செல்லும் காட்சிகளை போலீசார் கைப்பற்றி வாகன எண்களையும் எடுத்துள்ளனர். அதிராம்பட்டினம் பகுதியிலிருந்தே தாக்குதல்கள் தொடங்கி இருப்பதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளையும் முடுக்கிவிட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் கைகாட்டியில் வடகாடு போலீசார் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி பதிவுகள் உள்ளதால் இரு வாகனங்களிலும் கற்களோடு சென்று பஸ்களை உடைத்த மர்ம நபர்களை பிடித்து விடலாம் என்கின்றனர் போலீசார். ஒரே நேரத்தில் இரு கும்பல் 9 பேருந்துகளை உடைத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.