சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே அமைந்துள்ளது சங்கராபுரம் ஊராட்சி. தமிழகத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சங்கராபுரத்தில் கடந்த 2019ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில், தலைவர் பதவிக்கு தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், முதலில் வெற்றி பெற்றதாக தேவி மாங்குடிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு பிரியதர்ஷினி அய்யப்பன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, தேவி மாங்குடி இல்லாமல் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக மற்றொரு சான்றிதழ் வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில், கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடைசியில் தேவி மாங்குடி தரப்பு வெற்றிபெற்றது. இதையடுத்து, சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தேவி மாங்குடி பதவியேற்றுக் கொண்டார்.
அதே சமயம், இந்த மூன்று வருட காலத்திற்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாண்டியராஜன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும், கவுன்சிலர் நல்லம்மாள் செல்வராணி அவருக்கு துணையாக ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் ஊராட்சி நிதியைக் கையாடல் செய்வதாகவும், முறைகேடு செய்வதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. அதன்பிறகு, கவுன்சிலர் நல்லம்மாள் செல்வராணி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சங்கராபுரம் பஞ்சாயத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி காரைக்குடியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாண்டியராஜன், ஊராட்சி செயலர் அண்ணாமலை மற்றும் முன்னாள் தனி அலுவலர் கேசவன் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முறைகேடு விவகாரம் குறித்து நான்கு வாரத்திற்குள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதே நேரம், முறைகேடு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் தேவி மாங்குடி, கடந்த 25 ஆம் தேதி இரவு 12.30 மணியளவில் வழக்கம் போல் தனது கைப்பேசியில் உள்ள அலுவலக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது, அந்த நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கம்ப்யூட்டரில் எதையோ பார்த்துக் கொண்டிருப்பதையும், முக்கிய ஆவணங்கள் உள்ள கோப்புகளை எடுத்து பார்ப்பதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவி மாங்குடி உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அலுவலகத்தில் இருந்த நபரை கையும் களவுமாகப் பிடித்ததில், அது ஊராட்சி செயலர் அண்ணாமலை என்பது தெரியவந்தது. அப்போது, போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனிடையே, நள்ளிரவு நேரத்தில் முறைகேடு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் அழிக்க முயன்றதாக, அண்ணாமலையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகு, ஊராட்சி மன்றத் தலைவர் தேவி மாங்குடி அளித்த புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, நள்ளிரவு நேரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை அழிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.