ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 10 பவுன் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள் துணிச்சலாகக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். ஈரோடு, மூலப்பாளையம் ரைஸ் மில் சாலை பகுதியைச் சேர்ந்தவர் 44 வயது உமாமகேஸ்வரி. இவர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 28ந் தேதி மாலை அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வீடு வந்ததும் வீட்டுக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து உமா மகேஸ்வரி மீது வண்டியை வைத்து இடித்துள்ளனர். இதில் உமா மகேஸ்வரி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் கீழே விழுந்த உமா மகேஸ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையைக் கழுத்திலிருந்து பறித்துக் கொள்ளையடித்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தில் வேகமாகச் சென்று விட்டனர்.
ஓரிரு நிமிடத்திலேயே குடியிருப்பு பகுதி கொண்ட அவரது வீட்டுக்கு முன்பே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அவர் ஈரோடு தாலுகா காவல்துறை நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெண்களை அச்சமடையச் செய்துள்ளது.