புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பாப்பன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நாடிமுத்து. அவரது மகன் நித்திஷ்குமார் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ம் வகுப்பு படிக்கிறான். நாடிமுத்து மகளும் அதே பள்ளியில் படிக்கிறார்.
நேற்று செவ்வாய் கிழமை மதியம் கழிவறைக்குச் சென்று திரும்பிய நிதிஷ்குமாருக்கு திடீரென மயக்கம் வர, ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் வெளியில் இருப்பதால் உறவினரை வரச் சொல்வதாகக் கூறியுள்ளார் நாடிமுத்து. அடுத்த சிறிது நேரத்தில் மாணவன் உடல்நிலை மோசமடைந்த நிலையில் மீண்டும் நாடிமுத்துவை தொடர்பு கொண்டு தகவல் சொல்லிவிட்டு ஆசிரியர் ஒருவர் மாணவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளார்.
வீட்டிலிருந்த பாட்டி அந்த வழியாகச் சென்ற ஒரு வாகனத்தின் மூலம் சிறுவனை ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர் உடனே மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு சென்றபோது சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
தகவலறிந்து சிறுவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். புதன்கிழமை சிறுவன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் உடலில் விஷம் பாய்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுவன் உறவினர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் செய்தனர்.
அங்கு வந்த அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் சிறுவனை வீட்டில் அழைத்து வந்து விட்ட நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம். அதனால் கவனக்குறைவாகச் செயல்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்று கோரிக்கையும் வைத்தனர்.
நித்திஷ்குமார் உறவினர்களின் கோரிக்கையை ஏற்று கவனக்குறைவாகச் செயல்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை மகேஸ்வரி மற்றும் உதவி ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகியோரை கல்வித்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனால் பரபரப்பு சற்று குறைந்தது. சிறுவன் கழிவறைக்குச் சென்றபோது அங்கே பாம்பு போன்ற விஷம் பாய்ந்திருக்குமோ என்று கூறுகின்றனர்.