கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது, புதுபாலபட்டு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில், சுமார் 35 வயது உள்ள ஆண் ஒருவர் சடலமாக தூக்கில் பிணமாகத் தொங்கி உள்ளார்.
இந்தத் தகவல் அப்பகுதி மக்களால் சங்கராபுரம் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சுடுகாட்டுப் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில், அவர் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் (35) என்பதும், இவருக்குத் திருமணமாகி மேனகா என்ற மனைவியும் பதினோரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் இவர் கேரளாவுக்கு அடிக்கடி வேலைக்குச் சென்று வருவது உண்டு.
அப்படி வேலைக்குச் சென்ற இடத்தில் புதுப் பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 47 வயது விதவை பெண்ணுடன் ராமச்சந்திரனுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரனும் அந்தப் பெண்ணும், ஊருக்கு வந்த பிறகும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான், ராமச்சந்திரன் புதுப்பாலபட்டு சுடுகாட்டுப் பகுதியில் பிணமாகத் தூக்கில் தொங்கியுள்ளார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ராமச்சந்திரன் அண்ணன் சீனிவாசன் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ராமச்சந்திரன் தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? எனப் பல்வேறு கோணங்களில், போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சுடுகாட்டுப் பகுதியில் ஆணின் உடல் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.