முத்தூர் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்களை 18 மணி நேரத்தில் விரைந்து பிடித்த காவல்துறையினருக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் செயல்பட்டு வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளையில் ரூபாய் 12 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் ஏழு பேரை, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினர் ஒன்றாக செயல்பட்டு பிடித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் கொள்ளையர்கள் என்றும், ஒருவர் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், துப்பாக்கிகள், கத்திகள் ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறையினருக்குப் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.