அருப்புக்கோட்டையில் டி.எஸ்.பி. காயத்ரி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான முருகேசன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முயன்றபோது முருகேசனின் வலது கை முறிந்துள்ளதாக போலீசார் தரப்பி கூறப்படுகிறது.
அருப்புக்கோட்டையில் மினி வேன் டிரைவர் காளிக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, போராட்டக்காரர்களை அருப்புக்கோட்டை டி.எஸ்.பி காயத்ரி தடுக்க முயன்றார். அப்போது போராட்டக்காரர்களில் சிலர் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கினர். இந்த வழக்கில் சம்பவ நாளிலேயே ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பட்டியை சேர்ந்த இருளாண்டி என்பவர் மகன் முருகேசன் (வயது 28) தலைமறைவானார்.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி.கண்ணனின் உத்தரவின் பேரில் , திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் முருகேசனைத் தீவிரமாக தேடி வந்தனர். அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரைப் பகுதியில் காட்டுக்குள் முருகேசன் ஒளிந்திருப்பதாகத் தனிப்படை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே, காவல்துறையினர் அங்கு விரைந்தனர். காவல்துறையினரைக் கண்டதும் முருகேசன் தப்பிக்க முயற்சித்தார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் முருகேசனுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முருகேசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.