திருச்சி மாநகரில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் குற்றங்கள் நடந்தால் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுக்கவும் போக்குவரத்தை சீரமைக்க 1051 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் விளம்பர நிறுவனங்கள் மூலம் 589 கேமராக்களும் நன்கொடையாளர்கள் மூலம் 372 கேமராக்களும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் 70 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தக் கேமராக்கள் அனைத்தும் மாநகர கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்தபடியே காவல்துறையினர் கேமரா காட்சிகளைக் கண்காணித்துவருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அப்போது கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல் நிலையங்களில் ஆய்வு செய்தபோது, மாநகரின் பல இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள் குறித்த கணக்கெடுத்து, செயல்படாத கேமராக்களை சீரமைத்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் (17.10.2021) மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லையில் உள்ள 172 கேமராக்களில் 78 கேமராக்கள் செயல்படவில்லை என்பது தெரியவந்தது. இதுபோல் கே.கே. நகர் காவல் நிலைய பகுதியில் 64 கேமராக்கள், கோட்டைப் பகுதியில் 62 கேமராக்கள், ஸ்ரீரங்கத்தில் 41 கேமராக்கள், தில்லை நகரில் 24 கேமராக்கள் என 342 கேமராக்கள் செயல்படவில்லை என கண்டறியப்பட்டது. இதில் நேற்று கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள 21 கேமராக்கள் சரி செய்யப்பட்டன.