
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமகுளம் என்ற இடத்தில் கொட்டி வருகிறார்கள்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக இங்கு குப்பை கொட்டப்பட்டு வருவதால் மிகப்பெரிய குப்பை கிடங்காக அந்த இடம் மாறியுள்ளது. மேலும் குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே வந்து கொட்டி பெரிய மேடானவுடன் அதனை தீ வைத்து எரித்து விடுகிறார்கள். இதனால் புகை மூட்டம் அதிகமாக பரவி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைதொடர்ந்து ஊராட்சி தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் ஓமக்குளம் பகுதிக்கு குப்பை கொட்ட வந்த சிதம்பரம் நகராட்சி லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சிதம்பரம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இனிமேல் குப்பைகளை தரம் பிரித்து எடுத்துவந்து மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுப்பது மற்றும் குப்பைகளை இனிமேல் தீ வைத்து கொளுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.