திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை ஆளும் கட்சியான திமுக கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் மேயர் பதவியை தக்க வைத்திருக்கிறது.
இதில் திண்டுக்கல் 17 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட தொழிலதிபர் ரத்தினத்தின் மகனான இளைஞர் வக்கீல் வெங்கடேஷ், பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். அதை தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்த வெங்கடேஷ்-க்கு வார்டு செயலாளர் பதவியை கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில் குமார் கொடுத்தார்.
இருந்தாலும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வைத்த வார்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தீபாவளிக்காக வார்டுகளில் உள்ள மக்களுக்கு அதிரசம், முறுக்கு, காரசேவ், பாசிப்பயறு உருண்டை ஆகியவற்றை ஒரு சில்வர் பாத்திரத்தில் வைத்து வீடு வீடாகச் சென்று மாமன்ற உறுப்பினரான வெங்கடேஷ் கொடுத்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார். வார்டு மக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியடைந்தனர். மேலும் வார்டுகளில் பணிபுரியும் 40 துப்புரவு பணியாளர்களுக்கும் சுவீட் காரத்துடன் புதிய ஆடை எடுத்துக் கொடுத்து இருக்கிறார்.
வார்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண்பதாகவும் அந்த வார்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.