தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24/11/2021) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 517 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்களைத் திறந்துவைத்தார். மேலும், 39 துணை மின் நிலையங்களில் 712 எம்.வி.ஏ. அளவிற்கு திறன் அதிகரிக்க 141 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 எண்ணிக்கையிலான திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினைத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.