புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் நாகுடி அருகே உள்ள அரியமரக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ குழந்தை முனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. குழந்தை முனீஸ்வரர் மட்டும் வழக்கம் போலத் திண்டு அமைத்து வேல் மட்டும் நடப்பட்டிருக்கும் உருவம் இல்லை. ஆனால் பரிவார தெய்வங்களுக்குச் சின்ன சின்ன சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பூஜை போடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி கிடா வெட்டு பூஜை கோயில் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.
பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது நேற்று காலை முதல் நேர்த்திக்கடன் வைத்திருந்த பல கிராமங்களையும் சேர்ந்த பக்தர்கள் செங்கிடாய்களை வாங்கி வந்து கோயிலில் கட்டினர். மாலை வரை நூற்றுக்கணக்கான கிடாய்கள் வந்த பிறகு கோயில் பூசாரிகள் குலவையிட்டு சாமியாட்டத்தைத் தொடங்க ஒவ்வொரு கிடாய்க்கும் மாலை போட்டு மஞ்சள் தண்ணீர் தெளிக்கக் கிடாய்கள் தலையசைக்க அடுத்த சில நிமிடங்களில் தலைகள் வெட்டப்பட்டது.
வெட்டப்பட்ட கிடாய்களை உரித்து சுத்தம் செய்ய ஒரு குழுவினர். எலும்புகள், கறிகளை தனித்தனியாகப் பிரித்து எடுக்க ஒரு குழுவினர். கால், தோல் என அத்தனையும் சுத்தம் செய்து முடிப்பதற்குள் மிளகாய், மல்லி சரக்குகளைப் பாரம்பரிய முறையிலேயே இடித்துக் கொடுக்க, தயாராக இருந்த சமையலர்கள் செங்கிடாய் கறிகளை வேகவைத்து ரசமாகக் கொதிக்க வைத்தனர். மற்றொரு பக்கம் மூட்டை மூட்டையாக அரிசிகள் வேகவைத்துக் குவியல் குவியலாகச் சோறு குவிக்கப்பட்டிருந்தது.
சமையல் முடிந்து மாலை நேரப் பூஜைகள் தொடங்கும் போது அரியமரக்காடு சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் ஆயிரக்கணக்கில் வந்து குழந்தை முனியை வழிபட்டதோடு ஆளுக்கொரு பாக்குமட்டைகளை எடுத்துக் கொண்டு வயல்வெளியில் அமர சுடச்சுடச் சமைக்கப்பட்ட சோறுகளைத் தட்டுகளில் வைத்துக் கொதிக்க கொதிக்க வைக்கப்பட்ட கறியும் ரசமும் சேர்த்து ஊத்த பத்தாயிரம் பக்தர்களும் சுவைத்து ருசித்தனர்.
இக்கோயிலில் இருந்த பக்தர்கள் கூறும் போது, “அரியமரக்காடு மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புதிதாகத் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணமாகிப் பல வருடங்களாகக் குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என நேர்த்திக்கடன் வைத்து நேர்த்திக்கடன் நிறைவேறினால் செங்கிடாய் வாங்கி தருவதாக வேண்டிச் செல்வார்கள். இவ்வாறு நேர்த்திக்கடன் வைத்துச் செல்பவர்களுக்கு அடுத்த ஆண்டே ஆண் குழந்தை பாக்கியம் கிடைப்பதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் குழந்தை முனீஸ்வரருக்குப் பூஜை திருவிழாவின் போது ஆட்டுக்கிடாய் வழங்கி பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.
அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற கிடா வெட்டு பூஜையில் தங்கள் வேண்டுதலின் படி செங்கிடா வாங்கி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிடா வெட்டு பூஜைக்குப் பிறகு குழந்தை முனீஸ்வரர் கோயில் திடலில் 10,000 பேருக்குக் கறி விருந்து வழங்கப்பட்டது. அதே நேரம் இந்த பூஜை சோற்றைப் பெண்கள் சாப்பிடமாட்டார்கள் அதனால் அவர்களுக்காகக் கோழி கறி சமைத்து வழங்கப்படும்” என்றனர்.