Skip to main content

முக்கொம்பு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு; பூக்களைத் தூவி வரவேற்ற விவசாயிகள்

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

mukkombu dam water opened for paddy cultivation in delta districts

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து விட்டார். இதற்கு முன்னதாக முதல்வர்  திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

மேட்டூர் அணையில் இருந்து படிப்படியாகத் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தைக் கடந்து நாமக்கல், ஈரோடு, ஜேடர்பாளையம், நொய்யல், கரூர், வழியாக நேற்று மதியம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அப்போது 7 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே முழுவதுமாக முக்கொம்பு மேலணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மாயனூரில் இருந்து திருச்சி முக்கொம்பு மேலணையை நேற்று இரவு வந்தடைந்தது. அதன்பிறகு முக்கொம்பில் இருந்து  தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூக்களைத் தூவினர்.

 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தற்போதைய நிலையில் முக்கொம்புக்கு 1,900 கன அடி நீர் வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் நீர்வரத்து மாறுபடும். அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக வந்தடையும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கல்லணையை இன்று மதியம் சென்றடையும் என்றார். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைக்கிறார்கள். கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரைச் சென்று சேரும்.

 

மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறந்து விடப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" எனத் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்