சின்னஞ்சிறிய நாடுகளின் பொருளாதாரம் பெட்ரோல், டீசல் விலைய குறைத்திருப்பதைப் போல இந்திய பொருளாதாரம் விலையை குறைக்க அனுமதிக்காதது ஏன் ? சரியான வரவு-செலவு கணக்கை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய கையாலாகாத பா.ஜ.க. அரசு கலால் வரியை உயர்த்தி, மக்கள் விரோத நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை ஒரேடியாக மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியிருக்கிறது. கடந்த தேர்தலில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கூடுதல் மானியங்களை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை கூட்டி வருகிறார்கள். தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 76.72 ஆகவும், டீசல் விலை ரூ.68.38 ஆகவும் உயர்த்தியிருப்பது மக்களுக்கு எதிராக பா.ஜ.க. அரசு தொடுத்திருக்கும் மிகப் பெரிய தாக்குதலாகும். கடந்த 1 ஆம் தேதி அன்று இருந்த விலையை விட 25 காசுகள் கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த மே 26, 2014 அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி விலகிய நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 108 டாலராக இருந்தது. அது, ஏப்ரல் 2, 2018 அன்று 76 டாலராக குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 சதவீதம் விலை குறைந்திருக்கிறது. இதனடிப்படையில் விலை நிர்ணயம் செய்திருந்தால் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 45 ஆகவும், டீசல் விலை ரூ.40 ஆகவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். சர்வதேச சந்தை விலை வீழ்ச்சிக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை இதுவரை 12 முறை பா.ஜ.க. அரசு உயர்த்தியிருக்கிறது.
கடந்த மே 2014 இல் ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ.9.20 ஆக இருந்தது, தற்போது ரூ.19.48 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 211 சதவீத உயர்வாகும். அதேபோல, ஒரு லிட்டர் டீசலில் கலால் வரி ரூ.3.40 ஆக இருந்தது, தற்போது ரூ.15.33 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 443 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கலால் வரி வருவாய் 2014-15 இல் ரூபாய் 99 ஆயிரம் கோடியாக இருந்தது. 2016-17 இல் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக பெருகியிருக்கிறது. சர்வதேச விலை வீழ்ச்சியை பயன்படுத்தி, பெட்ரோல், டீசல் விலையை குறைத்து, மக்களின் சுமையை குறைக்காமல் அரசு கஜானாவை நிரப்புவதில் தான் மத்திய பா.ஜ.க. அரசு அக்கறை காட்டி வருகிறது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலையில் 52 சதவீதம் வரியாக விதிக்கப்பட்டு மக்கள் மீது சுமையை தொடர்ந்து ஏற்றுவதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் முழு காரணமாகும்.
அதேநேரத்தில், அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.42.14 ஆகவும், டீசல் விலை ரூ.46.93 ஆகவும், இலங்கையில் ரூ.53.47 ஆகவும், டீசல் விலை ரூ.39.69 ஆகவும், மலேசியாவில் ரூ.32.19 ஆகவும், டீசல் விலை ரூ.31.59 ஆகவும் குறைத்து விற்கப்படுகிறது. சின்னஞ்சிறிய நாடுகளின் பொருளாதாரம் பெட்ரோல், டீசல் விலைய குறைத்திருப்பதைப் போல இந்திய பொருளாதாரம் விலையை குறைக்க அனுமதிக்காதது ஏன் ? சரியான வரவு-செலவு கணக்கை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய கையாலாகாத பா.ஜ.க. அரசு கலால் வரியை உயர்த்தி, மக்கள் விரோத நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், இதனால் ஏற்படுகிற பாதிப்புகளின் மூலம் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டு சாதாரண ஏழைஎளிய மக்கள் தொடர்ந்து துன்பத்தை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இத்தகைய போக்கை எதிர்த்து மக்களை திரட்டுவதற்கு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டியது மிகமிக அவசியமாகும்.
எனவே, மக்கள் மீது சுமையை ஏற்றுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.