Skip to main content

காதல் மனைவி... பூட்டிய வீட்டுக்குள் அழுது கொண்டே இருந்த குழந்தை... நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

திருப்பூரில் காதல் திருமணம் செய்த இரண்டாவது மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேற்கு வீதியை சேர்ந்தவர் நிஷார் அகமது (37). கழிவு குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஹசினா (21) என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நிஷார் அகமதுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மனைவி ஹசினா நடவடிக்கையில் அடிக்கடி நிஷார் அகமதுக்கு சந்தேகம் அடைந்து அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. 

 

incident



இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்றும் கணவன், மனைவி இடையே சண்டைப் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த நிஷார் அகமது வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டி விட்டு அங்கிருந்த கத்தியால் மனைவி கழுத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஹசினா படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் நிஷா அகமது தனது கழுத்தை கத்தியால் தனக்கு தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரும் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்பட வில்லை. வீட்டுக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் மட்டும் நீண்ட நேரமாக கேட்டுள்ளது.இதனால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்காததால் அருகில் வசிக்கும் ஹசினாவின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஹசினாவின் தயார் வீடு அருகில் இருப்பதால் தனது மகள் வீட்டுக்கு உடனடியாக வந்தார்.


பின்பு குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து வந்ததால் பதறிப் போன ஹசினாவின் தாய் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது ஹசினா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், நிஷார் அகமது கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், நிசாரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஹசினா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் நிசார் மீது திருப்பூர், வீரபாண்டி காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நிசாரின் நடவடிக்கை பிடிக்காமல் அவரது முதல் மனைவி பிரிந்து சென்றுள்ளார் என்றும், அதன் பின்பு காதலித்து ஹசினாவை திருமணம் செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 

 

சார்ந்த செய்திகள்