பாடலூர் விஜய் மறைவு செய்தியை தற்போது சமூக வலைதளங்களில் எல்லோரும் மிகுந்த சோகத்தோடு பதிவு செய்து வருகிறார்கள். அதுவும் குறிப்பாக தி.மு.க. ஆர்வலர்களிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் விஜய் மாற்றுதிறனாளியான அவர் சமூக வலைதளங்களில் தன்னுயை சக்கர நாற்காலியில் இருந்து செயல்படும் இரண்டு விரல்களை கொண்டு தி.மு.க. பொதுக்கூட்டம் , மாநாடுகளில் முக்கிய தலைவர்களின் முக்கிய பேச்சுகளை தன்னுடைய இரண்டு விரல்கள் கொண்டு மின்னல் வேகத்தில் டைப் செய்து சமூக வலைதளத்தில் புயல் போல் செய்திகளை அப்டேட் செய்ததன் மூலம் தி.மு.க. தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே ஆச்சரியத்தையும், ஏற்படுத்தியது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானார். இதன் மூலமாகவே தலைவர்களிடம் பிரபலம் ஆனார். தி.மு.க. தலைவர் கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.
சமீபத்தில் உடல் நலக்குறைவால் திருச்சி நீரோ ஓன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அப்போது தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் எம்.ஏல்.ஏ. அன்பில் மகேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நிலையில் எந்த வித முன்னேற்றம் ஏற்படாமல் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை பாடலூர் விஜய் மறைந்த செய்தி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சமூக வலைதளத்தில் செயல்படும் ஆர்வலர்கள் பாடலூரில் உள்ள அவருடைய வீட்டிற்கு துக்கம் விசாரித்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்…
’’சமூக வலைதளத்திலும், முகநூலிலும் திமுகவின் கொள்கை பரப்பும் செயல்வீரராக திகழ்ந்த பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் விஜய் மறைவுச்செய்தி கேட்டு சொல்லொனாத் துயரத்திற்கும், பேரதிர்ச்சிக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளியான பாடலூர் விஜய் எனது பொதுக்கூட்ட பேச்சுக்களை எல்லாம் தானே டைப் செய்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, கழகத்தின் உண்மை தொண்டராக விளங்கிய அவர் திடீரென்று மறைந்தது என்னை கண் கலங்க வைத்திருக்கிறது. அவரின் இயக்கப் பணியினைக் கண்டு வியந்த நான் பெரம்பலூர் சென்ற நேரத்தில் நேரடியாக அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து அவரைப் பாராட்டி இருக்கிறேன்.
அப்போது அவரிடம் இருந்த இயக்க உணர்வினையும், கலைஞர் மீதும் என் மீதும் அவர் வைத்திருந்த பற்றையும் பாசத்தையும் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறேன். திமுக மீது மாசு கற்பிக்க முயல்வோர் மீதும் அபாண்டமாக பழி சுமத்துவோர் மீதும் துள்ளிக் குதிக்கும் காளை போல் தனது முகநூலில் பதிலடி கொடுத்த ஒரு உற்சாகமிக்க, உணர்வுமிக்க தொண்டரை இழந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறேன்.
பாடலூர் விஜய்யை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் முகநூலில் உள்ள திமுக தொண்டர்களுக்கும், திமுக தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.