
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் சாமியார் மூப்பனூர், குரும்பபட்டி, மீனாகண்ணிபட்டி, பண்ணைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு 'நகரும்' ரேஷன் கடை திட்டதிற்கான அரசாணை வெளியானது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பகுதி நேர ரேஷன் கடை கேட்டு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என தி.மு.க சார்பில் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இதன் விளைவாகத்தான் விராலிப்பட்டி ஊராட்சியில் நான்கு கிராமங்களுக்கு இத்திட்டம் வந்துள்ளது எனக் கூறி இத்திட்டம் நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுத்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி மற்றும் தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, ஊர் முழுவதும் ஃப்ளக்ஸ் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இது ஆளும் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவசர அவசரமாக நகரும் ரேஷன் கடை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அதற்குள், முந்திய தி.மு.கவினர் நகரும் ரேஷன் கடை அமைய உள்ள கிராமங்களில் தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்தனர். தி.மு.க ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் பங்கேற்று பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின் ஐ.பி.செந்தில்குமார் பேசும்போது; இப்பகுதியில் வாழும் அடித்தட்டு மக்களின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக தி.மு.க முன்னெடுத்துச் சென்ற கோரிக்கையின் விளைவாகத்தான் இங்கு நகரும் ரேஷன் கடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் இத்திட்டத்தைப் போராடி பெற்றுத் தந்ததில் பெரும் உரிமை கொள்வதாகச் சொல்லி, இத்திட்டம் வந்ததற்கு தி.மு.க.தான் காரணம் எனப் பேசிவிட்டுச் சென்றார். இதன் தொடர்ச்சியாக வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் 6 இடங்களில் நகரும் ரேஷன் கடை திட்டத்தை தொடங்கி வைக்க வந்தார்.

இந்த நிலையில், நிலக்கோட்டை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், குரும்பட்டி கிராமத்தில் வத்தலக்குண்டு அ.தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளர் மோகன் தலைமையில், மாணவர் அணிச் செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி பேசியபோது, “பொது மக்களுக்குத் தேவையான திட்டங்களை ஆட்சி செய்யும் ஆளுங்கட்சியினர்தான் கொண்டுவர முடியும். ஆளுங்கட்சியினர் கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சியினர் எப்படி உரிமை கொண்டாட முடியும். ஊர் முழுவதும் தி.மு.கவினர் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள் இது நியமா? எனக் கொந்தளித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் அண்ணன் எடப்பாடி ஆட்சி தான் இதை யாராலும் மாற்ற முடியாது.” எனப் பேசி முடித்தார்.