
தென்காசி மாவட்டம் வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்(35). இவர் புளியங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சம்பவத்தன்று நடைபெற்ற சிறப்பு வகுப்பின் போது ஆசிரியர் பிரான்சில் மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மாணவர் தரப்பில் இருந்து மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவருக்கு பிரான்சிஸ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புளியங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பிரான்சிஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.