
ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''கச்சத்தீவை யார் தாரை வார்த்து கொடுத்தது என்பது எல்லோருக்கும் தெரியும். கடலில் எல்லைப் பகுதி தெரியாமல் தாண்டி செல்கின்றனர். அதிமுகவை பற்றிதான் எல்லோரும் விமர்சனம் செய்கிறீர்கள். திமுகவில் நிறைய அக்கிரமம் அநியாயம் நடக்கிறது. இதை எல்லாம் ஊடகம் வெளியே கொண்டு வர ஏன் மறுக்கிறது. திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தயாராக இருக்கிறது. திமுகவை வீழ்த்தப்படுவதுதான் எங்களுடைய குறிக்கோள். ஓட்டுக்கள் சிதறாமல் ஒருங்கிணைத்து திமுகவை, மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்துவது அதிமுகவின் தலையாய கடமை. இது 2026 ஆம் தேர்தலில் நடக்கும் ''என்றார்.
அப்போது செய்தியாளர்கள் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'பாஜக கிஜக குறித்தெல்லாம் ஆறு மாதம் கழித்து கேளுங்கள். எல்லாமே யூகத்தின் அடிப்படையில் கேட்கும் கேள்வி. இதற்கு என்ன பதில் சொல்ல முடியும். நாங்கள் தான் சொல்லி விட்டோமே கூட்டணியில் வெட்ட வெளிச்சமாக செயல்படுவோம். இப்பொழுது இதுதான் நிலை. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கிறது'' என்று பாஜக குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார்.
சீமான்-விஜயலட்சுமி விவகாரம் குறித்த கேள்விக்கு, 'சீமான் விவகாரம் தனிப்பட்டது. தனிப்பட்ட நபரின் பிரச்சனை அது. அவரே சொல்லிவிட்டார் என்னை பேசி கொச்சைப் படுத்தாதீர்கள் என்று, மக்களுக்கு தேவையில்லாத கேள்வி தான் கேட்கிறீர்கள். நாங்கள்தான் அதற்கு கிடைத்தோமா? சேலம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சி எத்தனை திட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் கொண்டு வந்த திட்டங்களைக் கூட திமுக நிறைவேற்றவில்லை. ஆத்தூர் வளர்ந்து வருகின்ற நகரம், வாகனங்கள் செல்கின்ற பொழுது விபத்துக்குள்ளாகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என புறவழிச்சாலை கொண்டு வர திட்டம் தீட்டினோம். அதை நிறைவேற்றினார்களா? எவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்தோம். வசிஷ்ட நதியில் இருக்கும் அசுத்த நீரை வெளியேற்றி சுத்தப்படுத்த ஒரு திட்டத்தை வகுத்தோம். அதையும் கிடப்பில் போட்டு விட்டார்கள்'' என்றார்.
அண்மையில் பாஜக மாநில தலைவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்டதும், அதற்கு முன்னதாக ஈஷாவில் நடந்த சிவராத்திரி நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட நிலையில் அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.