அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் சூழ்நிலையில் கட்சிக்குத் தலைமை ஏற்க வருமாறு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இது ஒருபக்கம் என்றால் சில ஆதரவாளர்கள் வீடுகளுக்கே சென்று தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு நேற்று ஓபிஎஸ் வீட்டின் முன் காத்திருந்த ஆதரவாளர்களை சந்தித்து அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அதேபோல் தொண்டர்கள் அமைதி காக்குமாறு டிவிட்டர் வாயிலாக தெரிவித்திருந்தார்.
அதேபோல் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருந்த முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''உட்கட்சி நடவடிக்கை வெளியே பேசுவது தேவை இல்லாத ஒன்று. பொறுத்திருந்து பாருங்க 23 ஆம் தேதி நல்ல செய்தி கிடைக்கும்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சேலத்தில் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் பொன்னாடை கொடுத்து வரவேற்றனர்.
இந்நிலையில் சேலத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவனும் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் ஓபிஎஸ் உடன் கே.பி.முனுசாமி ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தற்பொழுது சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.