
பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை தென்னந்தோப்பில் வீசப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ளது மாத்தூர். அங்குள்ள பள்ளத்தூர் கிராமப் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. தோப்பு பகுதியில் இருந்து குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். அப்போது தொப்புள் கொடிகூட அகற்றப்படாமல் பெண் குழந்தை ஒன்று புதர் பகுதியில் வீசப்பட்டு கிடந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் குழந்தையை மீட்டனர். உடனடியாக மாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் குழந்தைக்கு முதல் உதவியை மேற்கொண்டு பின்னர் கிருஷ்ணகிரி குழந்தைகள் தொட்டில் காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தொட்டில் குழந்தைகள் காப்பக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகார் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரத்திலேயே தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று தென்னந்தோப்பில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.