புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது மனைவி நூர்ஜகான் (48). இவருக்கு 15 ந்தேதி முதல் காய்ச்சல். அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்தும் குணமாகவில்லை. அதனால் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு ரத்தம் மாதிரி சோதனை செய்த போது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாக எச் 1 எல் 1 வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு நாள் சிகிச்சைக்கும் அதிக பணம் தேவைப்படும் என்று நிர்வாகத்தில் கூறியதால் ஊருக்கு வந்துவிட்டனர்.
இந்த தகவலை வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் அறந்தாங்கி நகராட்சிக்கு தெரியப்படுத்தினர். நகராட்சி அதிகாரிகள் நூர்ஜகான் வசிக்கும் தெருவிற்கு மருந்து தெளித்ததுடன் அவரை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தனியார் மருத்துவமனை எடுத்துள்ள பரிசோதனையை வைத்து பன்றிக்காய்ச்சல் என்று சொல்ல முடியாது. அதனால் ரத்தம் மாதிரி எடுத்து சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்ப உள்ளோம். அதன் முடிவைப் பொருத்தே என்ன வைரஸ் என்று சொல்ல முடியும் என்றனர் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர். இந்த நிலையில் நூர்ஜகான் மகளான கல்லூரி மாணவி பெனாசிர் பாத்திமாவுக்கும் சில நாட்களாக காய்ச்சல் இருப்பதால் அவருக்கும் ரத்த பரிசோதனையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அறந்தாங்கியைச் சேர்ந்த பெண்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வேகமாக பரவியதால் சுகாதார துறை அமைச்சரின் மாவட்டமா இப்படி என புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.