பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மெய்யபுரத்தில் விநாயகர் ஊர்வலத்தில் மேடை அமைக்க போலிசார் மறுப்பு தெரிவித்ததால் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது போலிசாரை 100 சதவீதம் ஈரல் அழுகிவிட்டது காவல்துறைக்கு என்றும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தடுக்கிற போலிசுக்கு நான் லஞ்சம் தருகிறேன் அனுமதி கொடு என்று பேசியவர் நீதிமன்றத்தையும் வம்புக்கு இழுத்து இழிவாக பேசிய வீடியோ பதிவுகள் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 17 ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடன்சந்தூரில் பேசிய எச்.ராஜா அறநிலைய அலுவலர்கள் கோயில் சொத்துகளை லஞ்சம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்கிறார்கள் என்று அறநிலைத்துறை அலுவலர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அறநிலையதுறை அலுவலர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் பணிப்புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் செய்ததுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எச்.ராஜா மீது புகாரும் கொடுத்தனர்.
அதே போல புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எச்.ராஜா பெண்களை இழிவாக பேசியுள்ளார் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர். இந்த புகார் கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு நேற்று 19 ந் தேதி இரவு எச் ராஜா மீது 153, 353, 354, 354 ஆகிய பிரிவுகளில் உதவி ஆய்வாளர் குணசேகரன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் மட்டும் எச்.ராஜா மீது இரண்டாவது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பாக உள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.