மரண அச்சத்தை நொடிக்கு நொடி மனித மனங்களில் ஏற்படுத்தி வருகிற கரோனா வைரஸ் தொற்று பற்றி மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் தனித்திருங்கள் என ஊரடங்கு உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ந்து தமிழகத்தின் நகர்ப்பகுதிகளில் சில இளைஞர்கள் தேவையின்றி சம்பந்தமில்லாமல் வானங்களில் சுற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட காவல்துறை, வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து இதுபோல் வரக்கூடாது என சில நாட்கள் அனுப்பிவைத்தனர். ஆனாலும் பல பேர் அதைக் கேட்கவில்லை. இந்த நிலையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 இன் படி பிரிவு 144ல் இன்றுவரை 1012 வழக்குகள் பதியப்பட்டு, 1334 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
![erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/msfcUgJlrQ9rAS_ytPoDQ703i9Q1lI4TMLIcgGmaq40/1585667758/sites/default/files/inline-images/5656_6.jpg)
தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் இதுபோன்று வெளியே சுற்றுவது ஆபத்தாக முடியும் என ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஐ.பி.எஸ்., "நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வந்தோம். ஆனால் சிலர் திட்டமிட்டு, இது ஏதோ விடுமுறை போல ஊரைச்சுற்றி பார்ப்பதாக வருகிறார்கள். ஆகவேதான் சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இன்று வரை 1034 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்றார்.