மயிலாடுதுறையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்தது, அதிர்ஷ்டவசமாக அந்த பேருந்தில் பயணித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிர்பிழைத்துள்ளனர். மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 27ஏ என்கிற அரசு பேருந்து செம்பனார்கோவில் ஆக்கூர் வழியாக பொறையார் நோக்கி புறப்பட்டு சென்றது. பேருந்தில் 90 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். நிற்பதற்குகூட இடமில்லாமல் பேருந்தின் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் தொங்கியபடியே சென்றுள்ளனர்.
பேருந்தில் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றிருக்கிறது. தரங்கம்பாடி சாலையில் சென்றுகொண்டிருந்த போது பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென்று உடைந்து விழுந்தது. படியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். படிக்கட்டு உடைந்தது தெரியாமல் டிரைவர் வாகனத்தை ஓட்டிசென்றார். மாணவர்கள் பேருந்தை தட்டி கூச்சலிட்டனர். பிறகு பேருந்து நிறுத்தப்பட்டது. ஆத்திரத்தோடு இறங்கி சென்ற நடத்துனர் நடுரோட்டில் உடைந்து கிடந்த பேருந்தின் படிக்கட்டை எடுத்து பேருந்திற்குள் போட்டுவிட்டு மீண்டும் பேருந்து எடுத்து சென்றனர்.
இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறியதாவது, “அரசு பேருந்துகள் உரிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டு வருவதே இந்த சம்பவம் நடப்பதற்கான காரணம். காலை நேரத்தில் தினந்தோறும் மாணவர்கள் பேருந்தில் போதிய இடவசதியில்லாமல் தொங்கியபடியே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பூம்புகார், தரங்கம்பாடி, மணல்மேடு, பந்தநல்லூர் உள்ளிட்ட இடங்களின் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்துமே காலை வேலையில் அதிக கூட்டத்தோடு செல்வதும், மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமும் அடைவதும் வாடிக்கையாகி விட்டது” என்றனர்
பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்தை இயக்க வேண்டும். அதை விட முக்கியம் பணிமனைக்கு இரவு நேரங்களில் செல்லும் பேருந்துகளை உரிய முறையில் ஆய்வு செய்து, பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.