கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகராட்சியில் உள்ள காமராஜர் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 1,300 மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவெளிக்கு பிறகு ஒரு விதமான விஷவாயு துர்நாற்றத்துடன் வந்ததை அடுத்து ஆறு மற்றும் ஏழாம் வகுப்பிலிருந்த மாணவர்கள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தனர். சில மாணவர்கள் வாந்தி எடுத்தனர்.
இதனையடுத்து அதிர்ந்த பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில், மாணவர்கள் அனைவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளிக்கு அருகில் உள்ள மைதானத்தில் ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கும் மாணவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் காரணமாகப் பகுதியில் பெற்றோர்களும், பொதுமக்களும் அதிக அளவில் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை என அனைத்து துறையினரும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில் கழிவறையின் செப்டிக் டேங்க் வெடித்து விஷயவாயு தாக்கி இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் மயங்கி விழுவதற்கு இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.