திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் 5,360 பயனாளிகளுக்கு ரூ. 33.25 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளையும், கூட்டுறவுப் பணியாளர்கள், மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசு சான்றிதழ்களையும் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் ரூ. 7000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள மாவட்டத்தில் ஒரு மாவட்டத்திற்கு 75 நியாயவிலைக் கடைகள் வீதம் புதுப்பிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலும் 75 நியாயவிலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1034 நியாயவிலைக் கடைகள் உள்ளன. அதில் 821 கடைகள் சொந்த கட்டிடத்திலும், 213 கடைகள் வாடகைக் கட்டிடத்திலும் செயல்பட்டு வருகின்றன. 86 கடைகளுக்குப் புதியக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக 152 கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்த பின்புதான் தமிழகம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 44 ஆயிரத்து 820 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவுத்துறை மூலம் 6500 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முதல்வர் முடிவு செய்து இருக்கிறார். அதற்கு உறுதுணையாக அமைச்சர் ஐ.பெரியசாமி இருந்து வருகிறார். ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்கு பதிலாக கண்விழி மூலம் பதிவை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சென்னையிலும், திருவாரூரிலும் தொடங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் கூடிய விரைவில் கண்விழி பதிவு தொடங்கப்படும்” என்று கூறினார்.