விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் 52 வயது வாசு. இவரது மகன் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வருகிறார். அவருக்கு 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் வாசு மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
தண்ணீர் குடிப்பதற்காக வாசு எழுந்து அறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது, அறையின் உள்ளே மறைந்து இருந்த கொள்ளையன் திடீரென்று, வாசுவை தடியால் தாக்கியுள்ளான். அப்போது வாசு திருடனைப் பிடித்துக் கொண்டு, 'திருடன்', 'திருடன்' என்று சத்தம் போட்டுள்ளார். இவர்கள் சத்தத்தைக் கேட்ட வாசுவின் இரண்டாவது மகன் சந்திரகுமார் திருடனைப் பிடிக்க ஓடி வந்துள்ளார். அந்த நேரம் காவலுக்கு வெளியே நின்றிருந்த கொள்ளையர்கள், 4 பேர் தந்தை மகன் ஆகிய இருவரையும் உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். அதற்குள் வீட்டின் பின்பக்கம் வழியாகக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அதன்பிறகு உடைக்கப்பட்ட பீரோவைப் பார்த்தபோது, அதன் உள்ளே இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த வாசு, சந்திரகுமார் ஆகிய இருவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை செய்ததோடு வழக்குப் பதிவும் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.