நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.